வட்டார வழக்குச் சொற்களில் முந்திரி
முனைவர் மு. செல்வதுரை
முதுநிலை ஆய்வு வளமையர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை.05
இமெயில்: selva_ling@rediffmail.com

முன்னுரை
கடலோரப் பகுதிகளில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டன. தென்மாவட்ட வழக்கில் கொல்லாமரம், கொல்லாவு, கொல்லமாவு என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தினை வட மாவட்டங்களில் முந்திரிமரம் என்று மட்டுமே கூறுகின்றார்கள். கொல்லம் வழியாகக் கப்பலில் வந்ததால் இதன் விதையானது கொல்லாங்கொட்டையாகவும், பழம் கொல்லாம் பழமாகவும், மரம் கொல்லாமரமாகவும், முந்திரி விவசாயம் செய்பவர்கள் நம்புகின்றனர்.  அது மாமரம் போல செழித்து வளர்வதால் கொல்ல மாவு என்ற திருநாமமும் பெற்றது.
முந்திரி மரம் இருவித்திலை (dicotyledonous) தாவரப் பிரிவைச் சார்ந்தது.  இதனைத் தமிழ் மொழியில் ‘முந்திரி; வங்காள மொழியில் ஹிஜிலி-பாதம்(Hijili-badam) ஹிந்தியில் காஜ்ஜு(kaaju) தெலுங்கில், ஜிடி.மமிடி, முந்த-மமிடி,(Jidi-mamidi, Muntha-mamidi) கன்னட்த்தில் ஜூருபிஜ்ஜா (Geeru bijja), மலையாளத்தில் அண்டி பருப்பு(Andiparupppu) என அழைக்கின்றனர். முந்திரி நல்ல பணப்பயிர் ஆகும். உடையார்பாளையம் வட்டர முந்திரி சாகுபடி விவசாயிகளிடம் நேரடி தகவல் திரட்டப்பட்டு இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
                            
ஆங்கிலத்தில் Cashew nut என்று அழைக்கப்படும். இம்மரமானது 15 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. நேராக மேல்நோக்கி வளர்வதை விட, அடர்த்தியாகப் பரவி, கிளைகள் பின்னிப்பிணைந்து, தரையை நோக்கிப் படர்ந்து, குடைபோல வளர்கின்றது. இம்மர உச்சியிலிருந்து விழுந்தாலும் எளிதில் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை. அறிவியல் ரீதியாக அனகார்டியம் ஆசிடென்டலே (Anacardium Occidentale) என்று அழைக்கப்படும். இந்த மரமானது அனகார்டியேசியே (Anacardiaceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் போர்ச்சுகீசியர்களால் பரப்பப்பட்டு, இப்போது, பெரும்பாலும் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றது. முந்திரி மரத்தைப் போர்ச்சுகீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார்கள். 

முந்திரி மரம் மற்றும் அதில் விளையும் பருப்புகளுக்கு எதிர்காலத்தில் அதிக விலையில் விற்கப்படும் என அவர்கள் நினைத்திருக்க முடியாது. பின்பு கேரளாவில் மண் அரிப்பைத்தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மரங்கள் நடப்பட்ட. இன்று தமிழகம் முழுவதும் செம்மண், பொட்டல்மண் நிறைந்த பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. மேலும், மருத்துவக் காரணங்களுக்காக இந்த மரங்கள் நடப்பட்டதாகவும் சில தரப்பில் கூறப்படுகிறது.
போர்ச்சுகீசியர்கள் செய்த செயலால், இன்று முந்திரி பருப்பு ஏற்றுமதியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது முந்திரி மரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன. முந்திரி மரத்தின் சொந்த நாடு பிரேசில். அங்குள்ள கடற்கரைப்பகுதிகளில் முந்திரி மரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது.  மனித உடலில் உள்ள சிறுநீரகம் போன்ற வடிவில் இருக்கும். முந்திரிப் பருப்புகள் மாம்பழ மர இனத்தைச் சேர்ந்தவை.  இந்தியாவிலும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள், முந்திரிப்பழங்களையும், முந்திரிக் கொட்டையில் இருக்கும் பருப்பையும் சாப்பிடுகின்றனர். முந்திரிப்பழங்கள் சாராயம் வடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் தான் முந்திரிக்கொட்டை மற்றும் பருப்பின் மீதான கவனம் சர்வதேச நாடுகளில் அறிமுகமானது.

முந்திரிக்கொட்டையின் தோற்றம்
முந்திரி மரம் மிக வேறுபட்ட கனிகளை தருவதாகும். இக்கனிகள் பூவிலிருந்து முதலில் உருவாகும். (அதனால் தான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே என்னும் பழமொழியும் தமிழில் சொல்லப்படுகின்றது).  எல்லா வகைப் பழங்களிலும் கொட்டை அல்லது விதை பழத்தின் உட்பகுதியில் இருக்கும்.  ஆனால் முந்திரிப் பழத்தின் கொட்டை பழத்தின் வெளிப்பகுதியில் பழத்தோடு ஒட்டியிருக்கும்.  முந்திரி கொட்டை முன்பகுதியிலும் பழம் பின்பகுதியிலும் இருக்கும்.  அதன் பின்புறம் பார்க்க அழகாகத் திரண்டு நமக்குக் கிடைக்கும் கனியானது பொய்க்கனி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப்பொய்க்கனியின் சுவை மற்றும் கொட்டையின் அளவுக்கேற்ப மக்களிடம் வரவேற்பு அதிகம்.  இந்தக் கொட்டையிலுள்ள பருப்பின் சுவையால் கவரப்பட்ட கப்பல்காரர்கள், தாங்கள் வந்த கப்பலையே விற்று வாங்கித் தின்றதாக ஒரு நாட்டுப்புறக் கதையும் உண்டு.
முந்திரி பராமரிப்பு
முந்திரி மரம் வளர்க்க அதிக கவனிப்புத் தேவையில்லை. எளிதில் வளரும் அதிக வெப்பமான இடங்களில் வளரும். அதோடு வறட்சியையும் தாங்கக்கூடியது. இந்த மரம் செம்மண் மற்றும் பொட்டல்மண் நிறைந்த பகுதியில் வளரும். ஒரு அடி ஆழம் குழி தோண்டி குப்பை எருவு வைத்து முந்திரி ஒட்டுக்கண்ணு () முந்திரி நாட்டுக்கண்ணு () முந்திரி முளைக்கட்டிய கொட்டையைக் குழியில் வைத்து மூடுதல் வேண்டும்.  பின்னர் உயிர்த் தண்ணீர் ஊற்றுவர்கள்.  கண் வளர்ந்த பிறகு ஆடு, மாடு இலைகளை கடித்துத் சாப்பிடாமல் இருக்க சாணிப்பால் தெளித்து காப்பாற்றுகின்றனர். வை ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் செயல்படுத்துகின்றனர். மர வளர்ச்சிக்கு மழைக்காலத்தில் மரத்தின் அடியில் மண்வெட்டியைக் கொண்டு கொத்தி வாங்கி இயற்கை உரம் வைக்கின்றனர்.

முந்திரியின் பயன்கள்
முந்திரி மரத்தின் பயன்கள் என்று கூறும் போது அவை அடுப்பு எரிக்க விறகாகவும், வீட்டில் பயன்படுத்தக் கூடிய மரப்பொருட்கள் மேஜை, நாற்காலி, கட்டில், பத்தாயம் போன்றவைகள் செய்வதற்குப் பயன்படுகின்றது. ஆனால் இவைகள் குறுகிய காலம் மட்டும் உழைக்கும் தன்மையுடையன. இது மாவு போன்ற தன்மையுடையதால் எளிதில் உளுத்துப் பழுதடைந்துவிடும். முந்திரிப்பழம் ஒயின் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுகிறது. முந்திரி மரத்தின் அடிப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் பிசினை மரப்பொருட்களின் மீது பூசலாம். இதன் மூலம், பூச்சியின் தாக்குதலில் இருந்து மரப் பொருட்கள் பாதுகாக்கப்படும்.
பச்சை கொட்டையிலிருந்து வெளியாகும் பால் உருசியோல் (Urushiol) என்று அழைக்கப்பகின்றது. இப்பால் கையில் பட்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ( இப்பாலானது மதம் பிடித்த யானையை அடக்க பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது). இதன் பருப்பானது சர்வதேச அளவில் விலை மதிப்புமிக்கது.  தொலும்பில் காணப்படும் எண்ணையானது (பீனால்) மருத்துவரீதியாகவும், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பிசின் (ரெசின்) தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணைய் கையில் பட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
முந்திரியின் மருத்துவப் பயன்கள்
முந்திரி மரத்தின் இலையும், கிளைகளும் கூட நமக்குச் சிறந்தவழியில் மருந்தாகப் பயன்படுகின்றன. இவை உலகம் முழுக்க மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு, பாக்டீரியா எதிர்ப்பு, வீக்கத்தைக் குறைக்க, புண்ணாகாமல் தடுக்க சவ்வுகளைச் சுருங்க வைக்கப் பயன் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, பாரம்பரியமாக நீரிழிவு, வயிற்றுக்கடுப்பு, இருமல், இரத்தக்கட்டு, உணவு செரிமானத்தைத் தூண்டல், நீரைப்பிரித்தல், காய்ச்சலைக் குறைத்தல், இரத்த அழுத்தத்தைச் சரிசெய்தல், பேதி மருந்து, உடல் சூட்டை தணித்தல், உடலை  வலுவேற்றல், உறுதியளித்தல், புண்களைக் குணப்படுத்துதல் போன்ற பலவகை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
உலகளவில் கீழ்க்கண்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது மலேரியா, ஆஸ்துமா, மார்புச்சளி, தோல், தடிப்பு, இருமல், நீரிழிவு, செரியாமை, தோல்படை, காய்ச்சல், ஆண்மைக்குறைவு, குடல் அழற்சி, பாலுணர்வைத்தூண்ட, நரம்பு தளர்ச்சி, வலி, சோரியாசிஸ், கண்டமாலை (Scrofula), கிரந்தி, உள்நாக்கு அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப்பாதைக் கோளாறுகள், பால்வினை நோய்கள், புண்கள் என ஆப்பிரிக்கா, பிரேசில், மலேசியா, மெக்சிகோ, பனாமா, துருக்கி, வெனிசுலா உட்பட பல்வேறு மேலை நாடுகளில் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
முந்திரிப்பருப்பு உணவு
முந்திரிப்பருப்பு அதிகச்சத்தான உணவு ஆகும். முந்திரிப் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன் சத்தும், குறிப்பிட்ட அளவில் கொழுப்புச்சத்தும், கார்போஹைட்ரேட், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்களும் உள்ளன. தையாமின், நியாசின் போன்ற வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உடலுக்குத் தேவையான அமினோ அமிலமும்  இதில் உள்ளது. அதிக அளவில் சத்துக்கள் நிறைந்த பருப்பு என்பதால், பல வகையிலும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் பொருளாகி விட்டது. நமது உடலின் பல வகையான செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. மற்றவகைக் கொட்டைகளை விட இதில் கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது. ல்வேறு சத்துக்களைக் கொண்டிருப்பதோடு முந்திரியால் உடல் நலத்திற்கு வேறு பல நல்ல பயன்களும் கிடைக்கின்றது.

முந்திரிப் பருப்பில் உள்ள கொழுப்புச்சத்து உறையும் தன்மை கொண்டது அல்ல. ஆகையால், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாது. இருதயத்திற்கும் நல்லது.
முந்திரிப் பருப்பில் உள்ள ஓலிக் அமிலம் ஆரோக்கியமான இருதயத்திற்கு வழி வகுப்பதாக அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. உறையும் தன்மை இல்லாத கொழுப்புச்சத்து, குறைவான கொழுப்புச்சத்து கொண்ட உணவுடன் சேரும் போது, ரத்தத்தில் டிரை கிளிசரீன் அளவை குறைக்க உதவுகிறது. நூறு கிராம் முந்திரிப்பருப்பில் எழுபது விழுக்காடு கொழுப்புச்சத்து உள்ளது.

முந்திரியின் உணவு பொருள்கள்
இவையெல்லாம் பரவலாக நாம்றிந்த சேதிகள் தான். அமிலத்தன்மை வாய்ந்த இப்பழக்கூழானது, 'ஜாம்' தயாரிக்கவும், காரத்துவையல் செய்யவும் (சட்னி) எனப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இப்பழச்சாறு காய்ச்சி, வடிக்கப்பட்டு அதிலிருந்து மது தயாரிக்கப்படுகிறது அல்லது அத்துடன் நீரும், சீனியும் சேர்க்கப்பட்டுச் சுவை பானமாக அருந்தப்படுகிறது. குறிப்பாக, கோவாவில் தயாரிக்கப்படும் கேசிவ்பென்னி (Cashew Fenny) எனப்படும் நாட்டுச்சாராயம் புகழ்பெற்றது. ஓராண்டில் இந்தியாவில் வீணாகும் சுமார் 40 லட்சம் டன் முந்திரிப் பழங்களை இவ்வகையில் பயன்படுத்தினால், நம் விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. முந்திரிப்பழத்தைத் தின்ற சுவைக்கு ஒரு தனித்தன்மை உண்டு. சில பழங்களை உப்புச்சேர்த்துச் சாப்பிட்டால் நல்லது, சில பழங்களை அப்படியே சாப்பிடலாம். இவற்றைப்பிழிந்து சின்ன பாட்டில்களில் சாற்றைச்சேகரித்து, இரண்டு நாட்கள் கழித்துக் குடித்தால் கள்போலச் சுவைக்கும்.  முந்திரிப்பழத்தில் தயாரிக்கப்படும் மது (ஒயின்) மன அழுத்தத்தைத் தடுக்கக் கூடியதாம். இப்பழத்தில் டானின் அதிகமாக இருப்பதாலும், இது எளிதில் அழுகிவிடுவதாலும் பெரும்பாலும் கொட்டையை மட்டும் எடுத்துவிட்டுக்கனியை வீணாக வீசி எறிந்து விடுகின்றனர் அல்லது பொதுவாக ஆடு, மாடுகளுக்கு உணவாகவும், பயிர்களுக்கு உரமாகவும் பயன் படுத்தப்படுகின்றன.
முந்திரிப்பழத்தில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், இன்னும் பல முக்கியச் சத்துக்கள் உள்ளன. இதில் ஆரஞ்சுப்பழத்தில் இருப்பதைப் போல 5 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. அதோடு, அதிக தாது உப்புகளும், பல வாசனை எண்ணைய்களும் உள்ளன. இக்கொட்டையிலிருந்து முந்திரிப் பருப்பை வறுத்து, உடைத்துப் பிரித்தெடுப்பது சற்றுக் கடினமான பணியாகும் என்றாலும், முந்திரிக்கொட்டை விளையும் பகுதிகளில், விருந்தினர்களை வரவேற்க அல்லது மாலை நேர தேநீருக்குத் துணைப்பொருளாக முந்திரிப்பருப்பு வறுத்து வைக்கப்படுவது ழக்கம்.
முந்திரிப்பருப்பைப் பயன்படுத்தித் தூத்துக்குடியில் தயாராகும் மக்ரூன் எனப்படும் உணவுப்பண்டம் உலகப்புகழ் பெற்றதாகும். பாயாசத்தில் முந்திரிப்பருப்புகளை தேடிப்பிடித்து தின்தும், அரைவிளைச்சலான பச்சைநிற கொட்டையைக் கீணி, பருப்பை எடுத்து, அத்துடன் கறி, மீன் சேர்த்து சமைத்து உண்பதும் சுவையாக இருக்கும்.  

முந்திரி காய்க்கும் பருவம்
ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை முந்திரி காய்க்கின்றன. (1) கார்காலம்        (2) கோடைக்காலம். 1.கார்காலம் என்பது மழைக்காலத்தில் காய்க்கும் முந்திரிக்கொட்டை. இது  ஐப்பசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை (நவம்பர்டிசம்பர் ). கார்காலத்தில் மிகக் குறைந்த அளவில் காய்க்கும். முந்திரிக்கொட்டை மகசூல் மிகவும் குறைவு.  வருமானமும் குறைவு. 2.கோடைக்காலம் என்பது வெயில் அதிகம் உள்ள காலம். இது தை மாதம் முதல் வைகாசி மாதம் முடிய (ஜனவரி – ஜூலை ) ப்பருவ காலத்தில் காய்க்கும் முந்திரியே அதிக மகசூல் கொண்டது. ஜனவரிபிப்ரவரி மாதத்தில் முந்திரிக்கொழுந்து வெடிக்கும் காலமாகவும், பிப்ரவரிமார்ச்சு மாதத்தில் முந்திரி பூப்பூக்கும் காலமாகவும், மார்ச்சுஏப்ரல் மாதத்தில் முந்திரிக்காய் காய்க்கும் காலமாகவும், ஏப்ரல் –ஜூன் மாதத்தில் முந்திரிப்பழம் அறுக்கும் காலமாகவும், ஜூன் –ஜூலை மாதத்தில் முந்திரிக்கொட்டை ஈவடைக் காலமாகவும் கருதுகின்றனர்.
முந்திரி நோய்கள்மருந்துகள்
முந்திரி மரத்துக்கு வரும் நோய்கள் மரத்துளைப்பான், பூ கருத்தல், சூரை நோய், அசுனி, சாம்பல் நோய் போன்ற நோய்கள் ஆகும். அந்நோய்களைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான், எக்கலஸ், சிம்புஸ், பூச்சிமருந்து மற்றும் பிற மருந்துகளை தண்ணீரில் 10 லிட்டருக்கு 15 மில்லி வீதம் கலந்து மருந்து அடிக்கும் கருவியின் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்துகின்றனர்.
முந்திரிக்கொட்டையை டைக்கும் முறை
தொலும்புடன் கூடிய முந்திரிக்கொட்டையை இரும்புக்கடாயில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த கொட்டையை கல் கொண்டு உடைத்து முழுப்பருப்பைத்தனியாக எடுக்க வேண்டும். முந்திரிப்பருப்பு மொறு மொறுவென்று நன்றாக இருக்கும். உடையாமல் இருக்கும் முந்திரிப்பருப்பு முதல் ரகம் என்றும், இரண்டாகப்பிந்த பருப்பை இரண்டாம் ரகம் என்றும், தூள் தூளான முந்திரிப் பருப்பை மூன்றாம் ரகம் என்றும். கூறுகின்றார்கள். அதையும் கடந்து  கடுகு அளவில்  கிடைக்கும் முந்திரிப் பருப்பையும் பாக்கெட்டில் அடைத்து மசாலாக்களில்  சேர்த்து அரைப்பதற்கு உணவு விடுதியாளர்கள் வாங்கிச்செல்கின்றனர்.
முடிவுரை
முந்திரி சாகுபடியில் மேலை நாடுகளுக்கு இணையாக இந்தியா இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் உற்பத்தித்திறனிலும் இன்னும் சிறப்பாக வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. முந்திரியின் தோற்றம், பயன்பாடு, வரலாறு, மருத்துவ குணங்கள், பராமரிப்பு முறைகள், பேச்சு வழக்குச்சொற்கள் போன்ற பொருண்மையில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும்.
முந்திரியின் வழக்குச் சொற்கள்
  1.  
அசுணி
-
முந்திரி இலையின் பின்னால் ஒட்டி கொண்டு நோய் தாக்குதல்
  1.  
அடி அடிக்கிறது
-
முந்திரி மரத்தை சுற்றி கூட்டி வைத்தல்
  1.  
அடி ரெம்
-
முந்திரி மரத்தின் அடித்தண்டுப் பகுதி
  1.  
அடிப்பகுதி
-
முந்திரி பழத்தின் காம்பு உள்ள பகுதி
  1.  
அரியிரெ  கொட்டெ 
-
அரிவாளால் அரியும் முந்திரி கொட்டை
  1.  
அருக்கறது
-
 தொரட்டுகுச்சி கொண்டு  முந்திரி பழத்தை அறுத்தல்
  1.  
அலக்கு கழி
-
முந்திரிப்பழம் உலுக்க பயன்படும் முனையில் இரும்பினால் செய்த வளைந்த வாங்கு இருக்கும்
  1.  
அழுகிய  பழம்
-
முந்திரிப்பழம் ஒரு பகுதி மட்டும் அழுகியது
  1.  
இதழ்
-
முந்திரி பூவில் உள்ள ஒவ்வொரு பகுதியும்
  1.  
ஈஞ்செ  முந்திரி கொட்டை
-
முடிவடையும் காலத்தில் கிடைக்கும்  முந்திரி கொட்டை
  1.  
ஈவடெ காலம்
-
முந்திரி கொட்டை முடிவடையும் காலம்
  1.  
உயிர் தண்ணீ
-
முந்திரி கண்ணு (அ) முந்திரி கொட்டை நட்டவுடன் ஊற்றும் தண்ணீர்
  1.  
உலுக்கறது
-
அதிக  முந்திரிப்பழம் உள்ள மரத்தின்மேல் ஏறி உலுக்குதல்
  1.  
ஊணிவேர்
-
முந்திரி மரத்தின் ஆணிவேர்
  1.  
எருவு போடு
-
முந்தி மரத்துக்கு அடியில் இயற்கை எருவு போடுதல்
  1.  
ஏர் ஓட்டனும்
-
முந்திரி மரத்தைச் சுற்றி ர் உழவு செய்தல்
  1.  
ஒடெக்கரெ கொட்டெ
-
உடைக்கும் பக்குவம் பெற்ற முந்திரி கொட்டை
  1.  
கடெசி கொட்டெ
-
கடைசி பருவத்தில் காய்க்கும் முந்திரி கொட்டை
  1.  
கா  கொட்டெ
-
முதிர்வு இல்லாத  முந்திரி கொட்டை
  1.  
காஞ்செ  முந்திரிப்பழம்
-
காய வைத்த  முந்திரிப்பழம்
  1.  
காய்ஞ்ச  கொட்டெ 
-
வெயிலில் காய வைத்த முந்திரி கொட்டை
  1.  
கார் கொட்டெ
-
கார் காலத்தில் காய்க்கும் முந்திரி கொட்டை
  1.  
கிளெ / கெளெ
-
முந்திரி மரத்தில் பக்கத்தில் வளரும் பகுதி
  1.  
கிண்டி உடு
-
கையால் முந்திரிக் கொட்டையைக் கிண்டி விடுதல்
  1.  
கீண்றது
-
பச்சை முந்திரிக் கொட்டையை தொப்புள் பகுதியில் குஞ்சி கொண்டு கீணுதல்
  1.  
கீணு
-
பச்சை முந்திரிக் கொட்டையை கீணுதல்
  1.  
கீணுரெ கொட்டெ
-
பச்சை  முந்திரிக் கொட்டை கீணுதல்
  1.  
குப்பை எருவு 
-
இயற்கை உரம்
  1.  
குவிக்கறது
-
அனைத்தும்  முந்திரிப் பழங்களையும் ஓர் இடத்தில் குவித்தல்
  1.  
கூர் வாங்குது
-
முளைக்க வைத்த  முந்திரி கொட்டையின் தொப்புள் பகுதியில் முளை கூர் வெளி வருதல்
  1.  
கொத்தி வாங்கு
-
முந்திரி மரத்தினை உள் பகுதி முழுவதும் மண் வெட்டி கொண்டு கொத்தி விடுதல்
  1.  
கொழுந்து எலெ
-
முந்திரி மரத்தின் கொழுந்து இலை
  1.  
சருவு
-
முந்திரி மரத்தின் காய்ந்த இலை
  1.  
சருவு அடிக்கிறது
-
முந்திரி சருவு அனைத்தும் மரத்தின் வெளியே கொண்டு வருதல்
  1.  
சருவு சிக்கிறது
-
அறுவடை முடிந்த பிறகு மறைந்து கிடக்கும்  முந்திரிக் கொட்டை சிய்ச்சு எடுத்தல்
  1.  
சல்லெ  கொட்டெ
-
முழு பருப்பு இல்லாத முந்திரிக் கொட்டை
  1.  
சாம்பல் நோய்
-
மாட்டு சானத்தை கரைத்து முந்திரி கண்ணு இலையில் தெளித்தல்
  1.  
சுட்டெ  கொட்டெ
-
நெருப்பினால் சுட்ட  முந்திரிக் கொட்டை
  1.  
சுள்ளி
-
முந்திரி மரத்தினை கோடாலி கொண்டு உடைக்கும் போது ஏற்படும் மிகச் சிறிய தூள்
  1.  
சூரெ
-
முந்திரி கொழுந்து இலையை நோய் தாக்குதல்
  1.  
சேக்கறது
-
அனைத்தும்  முந்திரிப் பழத்தையும் ஓர் இடத்தில் சேர்த்தல்
  1.  
தப்பு  கொட்டெ
-
அறுவடை முடிந்த பிறகு மறைந்து  கிடக்கும்  முந்திரிக் கொட்டை
  1.  
தப்பு கண்ணு
-
தெரியாமல் கிடக்கும்  முந்திரிக் கொட்டை முளைத்திருப்பது
  1.  
திருவு
-
முந்திரிப் பழம்  முந்திரிக் கொட்டை தனியே திருவி எடுத்தல்
  1.  
திருவுறது
-
முந்திரிப் பழம் தனியே  முந்திரிக் கொட்டை தனியே பிரித்தல்
  1.  
தூள் குச்சி
-
முந்திரி மரத்தின் மிகவும் மெல்லிய பகுதி
  1.  
தொரட்டு கழி
-
முந்திரிப் பழம் பறிக்க பயன்படும் முனையில் இரும்பினால் செய்த வளைவு கம்பி இருக்கும்
  1.  
தொரட்டு குச்சி
-
முந்திரிப் பழம் பறிக்க பயன்படும்  குச்சி முனையில் வைத்து கட்டப்பட்டிருக்கும்
  1.  
நொந்தெ  பழம் 
-
முழு பழம் அழுகியது இதனை வெய்யிலில் காயவைத்தல் முந்திரி வத்தல் கிடைக்கும்
  1.  
பங்குனி பழெம்
-
பங்குனி மாதத்தில் விழும் முதல்  முந்திரிப்பழம்
  1.  
பச்சை  கொட்டெ
-
பச்சை நிறமாக இருக்கும் முந்திரிக் கொட்டை
  1.  
பழெகொட்டெ
-
முதிர்ந்த முந்திரிக் கொட்டை
  1.  
பறிக்கிறது
-
தன் உயரத்துக்குள்ள  முந்திரிப் பழத்தை பறித்தல்
  1.  
பிஞ்சி  கொட்டெ
-
பூவில் இருந்து வெளிவரும் முந்திரிக் கொட்டை
  1.  
பிஞ்சி பூ
-
முந்திரி பிஞ்சி வைக்கும் பூ
  1.  
பூச்சடிக்குது
-
முந்திரிப் பூவு நோய் தாக்குதல்
  1.  
பூச்சி  கொட்டெ
-
பூச்சி தாக்கிய முந்திரிக் கொட்டை
  1.  
பூச்சி நோண்டு
-
முந்திரி மரத்தில் உள்ள பூச்சியை வெளியே எடுத்தல்
  1.  
பூவு கருவுது
-
பனிதுளியில் பட்டு  முந்திரி பூவு அனைத்தும் கருகுதல்
  1.  
பொறுக்கறது
-
கிழே கிடக்கும்  முந்திரிப் பழத்தை பொறுக்குதல்
  1.  
ட்டு பூ
-
முந்திரி பிஞ்சி இல்லாத பூ
  1.  
மர துளைப்பான்
-
முந்திரி அடி மரத்தை வண்டு நோண்டுதல்
  1.  
மருந்து அடித்தல்
-
முந்திரிக்கு மருந்து அடித்தல்
  1.  
மருந்து தெளித்தல்
-
முந்திரிக்கு மருந்து தெளித்தல்
  1.  
முக்கு வக்கிது
-
முந்திரி மரம் மொட்டு விடுதல்
  1.  
முட்டெ கலைச்சி உடு
-
முட்டாக உள்ள முந்திரிக் கொட்டையை காலால் கலைந்து விடுதல்
  1.  
முந்திரி எலெ 
-
முந்திரி மரத்தின் இலை
  1.  
முந்திரி
-
முந்திரிப் பழமாக்குவதற்கு முந்திய நிலை
  1.  
முந்திரி ரெ
-
முந்திரிக் கொட்டையில் வெளிவரும் எண்ணைய் மற்றும் பழத்தில் இருந்து வெளிவரும் தண்ணீர் போன்ற திரவம் ஏற்படுத்தும் ஒரு வகை மாற்றம்
  1.  
முந்திரி காடு
-
அதிக பரப்பு உள்ள நிலப்பகுதி
  1.  
முந்திரி காம்பு
-
முந்திரிப் பழத்தை தாங்கி நிற்கும் பகுதி
  1.  
முந்திரி குச்சி
-
முந்திரி மரத்தின் சிறிய பகுதி
  1.  
முந்திரி கொட்டெ
-
முந்திரி மரத்தில் காய்க்கும் கொட்டை
  1.  
முந்திரி கொட்டெ
-
வெய்யில் முந்திரிக் கொட்டையைக் காய வைத்தல் காயவெய்
  1.  
முந்திரி கொல்லெ
-
முந்திரி பயிரிடப்பட்ட நிலம்
  1.  
முந்திரி கோந்து
-
முந்திரி மரத்தில் வடியும் பசை போன்ற திரவத்தினால்  உருவானது
  1.  
முந்திரி சக்கெ
-
முந்திரிப் பழத்தை சாறு பிழிந்தது
  1.  
முந்திரி சாறு
-
முந்திரிப் பழத்திலிருந்து வெளிவரும் தண்ணீர் போன்ற திரவம்
  1.  
முந்திரி சாறு
-
முந்திரிப் பழத்தில் இருந்து வடியும் தண்ணீர் போன்ற திரவம்
  1.  
முந்திரி தொப்புலு
-
முந்திரிக் கொட்டையில் உள்வாங்கி இருக்கும் பகுதி
  1.  
முந்திரி தோட்டம்
-
½ ஏக்கர் பகுதியில் உள்ள நிலம்
  1.  
முந்திரி தோப்பு
-
குறைவா உள்ள நிலப்பரப்பளவு
  1.  
முந்திரி தோலு
-
முந்திரிப் பயிறு ஒட்டி இருக்கும் மெல்லிய தோள்
  1.  
முந்திரி நாரு
-
முந்திரிப் பழத்தில் இருக்கும் நூல் போன்றது
  1.  
முந்திரி நெலம்
-
முந்திரிப் பயிரிடப்பட்ட நிலம்
  1.  
முந்திரி பட்டெ
-
முந்திரி மரத்தை ஒட்டிருப்பது
  1.  
முந்திரி பயிரு
-
முந்திரிக் கொட்டையில் உள்ளே இருக்கும் முழு பயிரு
  1.  
முந்திரி பயிறு
-
நிலத்தில் முந்திரி சாகுபடி செய்தல்
  1.  
முந்திரி பயிறு
-
முந்திரிப் பருப்பில் உள்ள மெல்லிய தோல் நீக்குதல் உரிக்கிறது
  1.  
முந்திரி பருப்பு
-
உள்ளே இருக்கும்  முந்திரிப்ருப்பை இரண்டாக பிரித்தல்
  1.  
முந்திரிப்பழம்
-
முந்திரி மரத்தில் காய்க்கும் பழம்
  1.  
முந்திரி பழெ கூறு
-
5 () 10  முந்திரிப் பழங்களை சேர்த்து விற்பனை செய்வது
  1.  
முந்திரி பழெ முட்டு
-
முந்திரிப் பழங்களை சேர்த்து வைக்கும் இடம்
  1.  
முந்திரி பழெம்
-
முந்திரி மரத்தில் காய்க்கும் பழம்
  1.  
முந்திரி பாலு
-
முந்திரிக் கொட்டையிலிருந்து வெளிவரும் எண்ணைய் போன்ற திரவம்
  1.  
முந்திரி பிசின்
-
முந்திரி மரத்தில் இருந்து வடியும் பசை போன்ற திரவம்
  1.  
முந்திரி ரெம்
-
படர்ந்து விரிந்த மர வகை
  1.  
முந்திரி வத்தெ
-
முந்திரிப் பழத்தை வெய்யிலில் காயவைத்தல்
  1.  
முன்பகுதி
-
முந்திரிக் கொட்டை உள்ள பகுதி
  1.  
மொக்கு வைக்கிது
-
முந்திரி மரம் முக்கு வைத்தல்
  1.  
மொட்டு விடுது
-
முந்திரி மரத்தில் உள்ள பூக்கள் மலர்தல்
  1.  
மொத கொட்டெ
-
முதல் பருவத்தில் காய்க்கும் முந்திரிக் கொட்டை
  1.  
மொளெ  கொட்டெ
-
24 மணி நேரம் தண்ணீரில் ற வைத்த முந்திரிக் கொட்டை
  1.  
ரெட்டெ  கொட்டெ
-
இரண்டு முந்திரி கொட்டைகள் ஒட்டிருப்பது
  1.  
ரெட்டெ பழெம்
-
இரண்டு முந்திரிப்பழம் ஒட்டிருப்பது
  1.  
வத்தெ  கொட்டெ
-
சுருக்கி பருப்பு இல்லாத முந்திரிக் கொட்டை
  1.  
வழி அடை / வழி
-
முந்திரி நிலத்தைச் சுற்றி வேலி வைத்தல்  அமைத்தல்
  1.  
வாசல் பட
-
முந்திரி நிலத்தின் நுழைவாயில் இருக்கும் மூங்கில் படல்
  1.  
வீணான  முந்திரி
-
முழுபழம் அழுகியது இதனால் எந்த பயன்பாடும் இல்லை பழம்
  1.  
வெதெ  கொட்டெ
-
முளைக்க வைக்கப் பயன்படும் முந்திரிக் கொட்டை
  1.  
வேலி போடு
-
அதிக பரப்பளவு உள்ள  முந்திரி காட்டை இரும்பு கம்பியால் வேலி போடுதல்
  1.  
வேலி வைக்கனும்
-
குறைந்த நிலபரப்பை ள்ளி () மூங்கில் முள் கொண்டு வேலி அமைத்தல்
  1.  
முந்திரி தொலும்பு
-
முந்திரிக் கொட்டையில் பருப்பு எடுத்த பின் இருப்பது



 
துனை நூற்ப்பட்டியல்
1.   Anonymous ,2001.Word Cashew congress – India-p-88
2.   Lawrence, K. Opeke. 1982. Tropical Tree crops John unity and sons.  
3.   The Hindu,1999, Survey of Indian Agriculture.
4.   Vasu,k, and Kuppusamy,G.1999.Trends and Periodicities in the rainfall of Annamamalai Nagar for 30 years for 1968-98, Annamailai University, Res, Annual.
5.    அர்ச்சுனன், கோ. நேதாசி சீத்தாராமன், 1982.வேளாண்மைக் களஞ்சியம், நியூ புத்தக நிலையம், சென்னை.
6.    கல்யாணசுந்தரம்,ப.2003.வேளாண் வரிசை- முந்திரி சாகுபடி, மணிவாசகர் பதிப்பகம் சிதம்பரம்.
7.    தில்லைநாயகம், வே.1988. ‘இந்திய வேளாண்மை’  தொகுதி-2 , மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
8.    மணிமாறன், ப.1998. வளர் தமிழ் அறிவியல், தஞ்சாவூர், முந்திரி பயிரிடும் முறை-ஒரு கண்ணோட்டம். பக்கம் 273-282
9.    முந்திரி சாகுபடி தொழில் நுட்பங்கள், மண்டல ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு , வேளாண்மைப் பல்கலைக் கழகம் விருத்தாசலம்.
You can leave a response, or trackback from your own site.

1 Response to "வட்டார வழக்குச் சொற்களில் முந்திரி"

  1. Unknown Said,

    தெளிவான கட்டுரை.

    Posted on 8 September 2015 at 01:46

     

Post a Comment

காணொளிக்காட்சிகள்